வருசநாடு அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை

வருசநாடு அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-12-01 23:00 GMT
கடமலைக்குண்டு, 

வருசநாடு அருகே தும்மக்குண்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 28). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் வேலை பார்த்தார். அப்போது அடிதடி சண்டை தொடர்பான வழக்கில் முருகன் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

அப்போது சிறையில் இருந்த ரவிக்குமார் என்பவருடன் முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. சில மாதங்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த முருகனை ஜாமீனில் எடுப்பதற்கு ரவிக்குமார் உதவி செய்தார். அதன்பின்பு முருகன் தும்மக்குண்டுவுக்கு வந்தார்.

இந்நிலையில் கடந்த 28-ந் தேதி ரவிக்குமார், முருகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது தான் தேனியில் இருப்பதாகவும் சில நாட்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் எனவும் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். இதனையடுத்து முருகன் தேனிக்கு சென்று ரவிக்குமாரை சந்தித்தார். பின்னர் அவரை தும்மக்குண்டு அருகே உள்ள தனது தோட்ட வீட்டில் முருகன் தங்க வைத்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் தோட்டத்திற்கு உர மூட்டைகளை முருகன் கொண்டு சென்றார் அப்போது தோட்ட வீட்டில் தங்கியிருந்த ரவிக்குமாரை காணவில்லை. இதனையடுத்து முருகன் தோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சென்று அவரை தேடினார். அப்போது தோட்டத்தின் அருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு ரவிக்குமார் பிணமாக தொங்கினார். இதுகுறித்து வருசநாடு போலீசாருக்கு முருகன் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து அவருடைய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர், ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ரவிக்குமார் என்றும், மனைவியை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து விட்டு விடுதலையாகி வந்ததும் தெரியவந்தது. பின்னர் ரவிக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எதற்காக தும்மக்குண்டு வந்தார்? தூக்குப்போட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்