வலங்கைமான் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை எந்திரம் அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்

வலங்கைமான் அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை எந்திரத்தை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்தார்.

Update: 2019-12-01 22:45 GMT
வலங்கைமான்,

வலங்கைமான் அரசு மருத்துவமனையில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான ரத்த அணுக்கள் பரிசோதனை எந்திரம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு ரத்த பரிசோதனை எந்திரத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் தமிழக மக்களின் நலன் கருதி தினந்தோறும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு தரமான மருத்துவ சேவைகள் தொடர்ந்து கிடைக்க பல்வேறு நடவடிக்கைகளை முதல்-அமைச்சர் அவர்கள் எடுத்து வருகிறார். இந்த எந்திரத்தின் மூலம் சிவப்பு ரத்த அணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள், தட்டை அணுக்கள், ஹீமோகுளோபின் அளவு, ரத்த அடர்த்தி, ரத்தத்தின் நீர், உப்பு அளவு, ரத்த சோகை, டெங்கு காய்ச்சல் அறிகுறி, கர்ப்பிணிகளின் அவசர ரத்த பரிசோதனை, ரத்த பரிமாற்றத்திற்கு முன் கண்டறியப்படும் ரத்த பரிசோதனைகள் செய்யப்படும்.

டெங்கு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது

மேலும் இந்த எந்திரத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு 60 பரிசோதனைகளையும், ஒரு முறை எடுத்த ரத்தத்தை மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தலாம். இந்த மாவட்டத்தை பொறுத்தவரை டெங்கு தடுப்பு நடவடிக்கைள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதால் டெங்கு நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. எல்லா காலங்களிலும் மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுகிற அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், தலைமை மருத்துவர் சித்ரா, திருவாரூர் உதவி கலெக்டர் ஜெயப்பிரீதா, தாசில்தார் இஞ்ஞாசிராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயபால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்கள் சங்கர், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்