பந்தலூர் அருகே, இறந்த குட்டியை தேடி கூட்டத்துடன் வலம் வரும் தாய் யானை

பந்தலூர் அருகே இறந்த குட்டியை தேடி கூட்டத்துடன் வலம் வரும் தாய் யானை குடியிருப்பு பகுதிக்குள் புகுவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2019-12-01 22:15 GMT
பந்தலூர்,

பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே நாயக்கன்சோலை பகுதியில் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியையொட்டி உணவுத்தேடி வந்த யானைகள் கூட்டத்தில் ஒரு குட்டியானை இறந்தது. இதையடுத்து அந்த குட்டியின் தாய்யானை மட்டும் அங்கேயே நின்றது. மற்ற யானைகள் காட்டுக்குள் சென்றன. இதுகுறித்து தகவல் அறிந்த சேரம்பாடி வனத்துறையினர் அங்கு வந்தனர். இதையடுத்து அந்த குட்டி யானையின் உடல் அருகேயே தாய் யானை நின்றுகொண்டிருந்தது.

வனத்துறையினர், மற்றும் வனத்துறை வாகனங்களையும் அருகில் விடாமல் துரத்தியது. மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை மிதித்து சேதப்படுத்தியது. தொடர்ந்து தனது குட்டி உடலை எடுக்கவிடாமல் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தி வந்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு தாய் யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.

இதையடுத்து சேரம்பாடி வனத்துறையினர் குட்டியானையின் உடலை மீட்டு, கோட்டமலை வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பின்னர் பந்தலூர் கால்நடை டாக்டர் பாலாஜி தலைமையில் பிரேத பரிசோதனை நடத்தினர். பிறகு அங்கேயே குழிதோண்டி புதைத்தனர்.

இந்த நிலையில் தாய் யானை, குட்டி யானையை தேடி, மற்ற காட்டு யானைகள் கூட்டத்துடன் மீண்டும் வனப்பகுதியையொட்டி உள்ள குடியிருப்பு பகுதியில் வலம் வருகிறது.

குட்டியானையை தேடி இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் தாய் யானை மற்ற காட்டு யானைகளுடன் சுற்றி வருவதால் பொதுமக்களும், தனியார் தோட்ட தொழிலாளர்களும் பீதி அடைந்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், குட்டியை தேடி குடியிருப்பு பகுதியில் சுற்றி திரியும் தாய் யானையையும், மற்ற காட்டு யானைகளையும் கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதுபற்றி சேரம்பாடி வனச்சரகர் (பொறுப்பு) கணேசன் கூறியதாவது:-

காட்டு யானைகளை வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் நடந்து செல்லும்போது பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்