சேதுபாவாசத்திரம் பகுதியில் கனமழை: 3-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

சேதுபாவாசத்திரம் பகுதியில் கனமழை காரணமாக 3-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2019-12-01 23:00 GMT
சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம், சின்னமனை, பிள்ளையார்திடல், சேதுபாவாசத்திரம், கழுமங்குடா, காரங்குடா, சம்பைபட்டினம், அடைக்கத்தேவன், மந்திரிப்பட்டினம், அண்ணாநகர் புதுத்தெரு, கணேசபுரம், செம்பியன்மாதேவிபட்டினம் உள்ளிட்ட மீனவ கிராமங்களில் சிறிய வகை நாட்டுப்படகுகள் மூலமாகவும், பெரிய வகை விசைப்படகுகள் மூலமாகவும் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கஜா புயலுக்கு முன்பு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இருந்தன. தற்போது இந்த பகுதியில் 134 விசைப்படகுகள் மட்டுமே உள்ளன. மீதம் உள்ள படகுகள் புயலில் உடைந்து சுக்கு நூறாயின. வாரத்தில் திங்கட்கிழமை, புதன்கிழமை, சனிக்கிழமை ஆகிய நாட்களில் விசைப்படகு மீனவர்களும், மற்ற நாட்களில் நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

தொடர் மழை

இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக நேற்று 3-வது நாளாக சேதுபாவாசத்திரம் பகுதியை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்களின் நாட்டுப்படகுகள் மற்றும் விசைப்படகுகள் அனைத்தும் பாதுகாப்பாக மீன்பிடி துறைமுகங்களில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

மேலும் செய்திகள்