அரக்கோணத்தில் தெருக்களில் தேங்கிய மழைநீர் அகற்றம் - நகராட்சி ஊழியர்கள் நடவடிக்கை

அரக்கோணத்தில் தெருக்களில் தேங்கிய மழைநீரை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

Update: 2019-12-01 22:15 GMT
அரக்கோணம், 

அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் இருந்து இரவு வரை தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இரவு 9 மணிக்கு மேல் பலத்தமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அரக்கோணம் நகரத்தில் தெருக்களில் மழைநீர் வெள்ளம் ஆறாக ஓடியது. கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் கழிவுநீருடன் ஆர்ப்பரித்து ஓடியது.

நகரில் தாழ்வான பகுதியில் உள்ள தெருக்களில் உள்ள வீடுகளில் மழைநீர் கழீவுநீருடன் சேர்ந்து வீட்டிற்குள் புகுந்தது. தெருக்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் நடந்து செல்பவர்கள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் தெருவில் பள்ளம் எங்கே உள்ளது என்று தெரியாமல் பள்ளங்களில் கீழே விழுந்து காயங்களுடன் எழுந்து சென்றனர். அரக்கோணம் நகரில் நேற்று முன்தினம் 58 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

அரக்கோணம் நகரில் ராஜகோபாலன் தெரு, டவுன் ஹால் தெரு, நேருஜி நகர், ராஜாஜி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இதை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று தினத்தந்தியில் செய்தி வெளியானது.

அதைத்தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ராஜவிஜயகாமராஜ், சுகாதார ஆய்வாளர் ஸ்ரீகாந்த் மற்றும் நகராட்சி ஊழியர்கள் அரக்கோணம் நகரில் ராஜகோபாலன் தெரு, டவுன் ஹால் தெரு, ராஜாஜி தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் குளம் போல் தேங்கி நின்ற மழைநீரை கொட்டும் மழையிலும் நனைந்து கொண்டு அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

நகராட்சி ஊழியர்கள் மழைநீர் செல்லும் கால்வாயில் ஏற்பட்டு இருந்த அடைப்புகளை அகற்றினார்கள்.

அரக்கோணம் நகராட்சியில் மழைநீர் தேங்கி நின்ற தெருக்களில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டிகளின் மூடிகள் திறக்கப்பட்டு தண்ணீர் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொட்டிகள் திறக்கப்பட்ட பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் தொட்டியை சுற்றி தடுப்பு வேலிகள் போன்று அமைத்து இருந்தனர்.

மேலும் செய்திகள்