திருச்சியில் பெய்த மழைக்கு 2 வீடுகள் இடிந்தன சாலைகள் சேதம் அடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி

திருச்சியில் பெய்த மழைக்கு 2 வீடுகள் இடிந்தன. சாலைகள் சேதம் அடைந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

Update: 2019-12-01 23:00 GMT
திருச்சி,

மத்திய குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

. திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் அநேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

பெரும்பாலான சாலைகள் மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக மாறின. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். ஒரு சில தாழ்வான பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. அவ்வப்போது சிறிது இடைவெளி விட்டு, விட்டு மழை பெய்து வந்ததால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். ஆங்காங்கே வாகன ஓட்டிகள் மழை கோட்டுடன் செல்வதை காண முடிந்தது.

வீடுகள் இடிந்தன

இந்தநிலையில் திருச்சியில் பெய்த மழையின் காரணமாக தில்லைநகர் வடவூர் பகுதியில் சித்ரா(வயது 56) என்பவரது ஓட்டு வீடு இடிந்தது. அந்தசமயம் வீட்டில் சித்ராவுடன், அவரது மகள், மருமகன், பேத்தி ஆகியோர் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். நேற்று காலை 7 மணி அளவில் திடீரென சர, சரவென வீடு இடியும் சத்தம் கேட்டது. உடனே வீட்டில் இருந்த அனைவரும் வெளியே ஓடி வந்து விட்டனர். சில நொடிகளில் வீட்டின் மேற்கூரை ஓடுகள் வீட்டினுள் சரிந்து விழுந்தன. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தன. உறையூர் ராமலிங்கநகரில் சாலையோரம் இருந்்த மரம் சாய்ந்து விழுந்தது.

காந்திமார்க்கெட் அருகே தென்னூர், பாலக்கரை, மேலசிந்தாமணி, கருமண்டபம், உறையூர், எடமலைப்பட்டிபுதூர், அரியமங்கலம், விஸ்வாஸ்நகர், ஸ்ரீரங்கம், சஞ்சிவீநகர் என நகரின் பல பகுதிகளின் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறின. இதேபோல் திருச்சி மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான ராம்ஜிநகர், திருவெறும்பூர், லால்குடி, மணப்பாறை, தொட்டியம், முசிறி, துவாக்குடி, கம்பரசம்பேட்டை, குண்டூர் என பல பகுதிகளிலும் விட்டு, விட்டு மழை பெய்து வந்ததால் திருச்சியில் நேற்று குளிர்ச்சியான சீதோஷ்ணநிலை நிலவியது.

கணவன்-மனைவி உயிர் தப்பினர்

ஜீயபுரம் அருகே உள்ள அந்தநல்லூர் 4-வது வார்டை சேர்ந்தவர் தங்கராஜ்(38). விவசாய கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி கோமதி. இவர்கள் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது தொடர் மழையின் காரணமாக மண் சுவரின் ஒரு பகுதி திடீரென வெளிப்புறமாக இடிந்து விழுந்தது. இதனால், பதறி அடித்து எழுந்த கணவன்-மனைவி இருவரும் வெளியே ஓடி வந்து உயிர் தப்பினர். சுவர் இடிந்து விழுந்ததால் மேற்கூரையும் அப்படியே சரிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி விவேகானந்தன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

மேலும் செய்திகள்