பெரியார்நகரில் 3-வது நாளாக சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதால் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை பெரியார் நகரில் 3-வது நாளாக சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடுவதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2019-12-02 23:00 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 29-ந் தேதி நள்ளிரவு முதல் நேற்று முன் தினம் வரை பலத்த மழை பெய்தது. குறிப்பாக இந்த மழைக்கு புதுக்கோட்டை நகரில் ராஜ கோபாலபுரம், பெரியார் நகர், கம்பன்நகர், கூடல்நகர், எழில்நகர், மீனாட்சிநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள சில வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று காலையில் புதுக்கோட்டையில் மழை பெய்யவில்லை. இருப்பினும் 3-வது நாளாக பெரியார்நகர் சாலையில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் வடியவில்லை. இதனால் பெரியார்நகரில் உள்ள பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதேபோல வட்டார போக்குவரத்து அலுவலகம், வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகம், மாவட்ட விளையாட்டு மைதானம், அரசு மகளிர் கலைக்கல்லூரி ஆகிய வளாகங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது.

மழையளவு

இதற்கிடையில் நேற்று மதியம் சுமார் ½ மணி நேரம் பலத்த மழை பெய்தது. தொடர் மழையின் காரணமாக புதுக்கோட்டை நகர் பகுதியில் உள்ள அனைத்து சாலைகளும் சேதமடைந்து, ஆங்காங்கே குண்டும், குழி யுமாக உள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து உள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் பெருங்களூர் 2, புதுக்கோட்டை 40, மழையூர் 3.40, திருமயம் 32.20, அறந்தாங்கி 7.40, மீமிசல் 8.20, மணமேல்குடி 7, இலுப்பூர் 17, குடுமியான்மலை 27, அன்னவாசல் 45, விராலிமலை 11, உடையாளிப்பட்டி 3.30, கீரனூர் 16, பொன்னமராவதி 45.40, காரையூர் 6.80 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதிகபட்சமாக பொன்ன மராவதியில் 45.40 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக பெருங்களூரில் 2 மில்லி மீட்டர் மழையும் பதிவானது.

மேலும் செய்திகள்