தமிழகத்தில் 100 ஆண்டு காலம் அ.தி.மு.க. ஆட்சிதான் நடக்கும் - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

தமிழகத்தில் 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க ஆட்சிதான் நடக்கும் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கோபியில் நேற்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-12-02 22:45 GMT
கடத்தூர், 

பா.ஜ.க மாநில துணைத்தலைவர் அரசகுமார் ஸ்டாலின் முதல்வராவார் என்று கூறியுள்ளார். அது அவர் கருத்து. கருத்து கூற அனைவருக்கும் உரிமை உண்டு. யாரைக்கண்டும் எங்களுக்கு அச்சமில்லை. உள்ளாட்சி தேர்தல் மற்றும் வருகிற 2,021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியது போல் 100 ஆண்டுகாலம் அ.தி.மு.க ஆட்சிதான் நடக்கும்.

சென்னையில் பெய்து வரும் மழையினால், பள்ளிக்கூட புத்தகங்கள் நனைந்து சேதமடைந்துள்ளது. இதனால் மாணவ, மாணவிகளுக்கு விரைவில் புதிய புத்தகங்கள் வழங்கப்படும்.

மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க பள்ளிகளில் இறைவணக்கம் முடிந்த பிறகு அவர்களுக்கு 10 முதல் 15 நமிடம் வரை உடற்பயிற்சி அளிக்கப்படும். தமிழ்நாட்டில் சி.எஸ்.ஆர். நிதி மூலம் ரூ.128 கோடி செலவில் அரசுப் பள்ளிகளில் வர்ணம் பூசுதல், மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவ, மாணவிகளின் எதிர்கால கனவுகளை இந்த அரசு நிறைவேற்றும்.

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு நன்றாக உள்ளது. இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் தமிழகம் முதல் மாநிலமாக சிறந்து விளங்குகிறது. பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபரும் பாராட்டி தமிழக முதல்-அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இதைவிட என்ன சான்று வேண்டும்?

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூட்டுறவு சங்கத் தலைவர் காளியப்பன், நகராட்சி முன்னாள் துணை தலைவர் செல்வராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்