பெரியகுளம் பகுதியில் பலத்த மழை: அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன - போக்குவரத்து துண்டிப்பு

பெரியகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையால் அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

Update: 2019-12-02 22:30 GMT
தேனி,

தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் இரவில் மழை பெய்தது. பெரியகுளம், சோத்துப்பாறை பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மாவட்டத்தில் மொத்தம் 167.2 மில்லிமீட்டர் மழை பெய்து இருந்தது. இதன் சராசரி மழையளவு 13.9 மில்லிமீட்டர் ஆகும். அதிகபட்சமாக பெரியகுளத்தில் 83 மில்லிமீட்டரும், சோத்துப்பாறையில் 40 மில்லிமீட்டரும் மழை பெய்தது. இந்த பலத்த மழை காரணமாக சோத்துப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

சோத்துப்பாறையில் இருந்து கண்ணக்கரை வழியாக அகமலை செல்லும் மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. சோத்துப்பாறையில் இருந்து 2½ கிலோ மீட்டர் தொலைவில், மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன.

இந்த பாறைகள் மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு அடைத்தன. இதனால், அந்த பாதையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்த மலைப்பகுதியில் அகமலை, சொக்கன்அலை, ஊரடி, ஊத்துக்காடு, கரும்பாறை, அண்ணாநகர், பட்டூர், சின்னூர், பெரியூர் ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் அகமலைக்கு மட்டும் சாலை வசதி உள்ளது. இந்த சாலையும் பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் பஸ்கள் இயக்கப்படுவது கிடையாது. ஆட்டோ, ஜீப்கள், மினிலாரி போன்ற வாகனங்கள் மட்டும் விளை பொருட்களை ஏற்றிச் செல்வதற்கும், மக்கள் பெரியகுளம் வந்து செல்வதற்கும் இயக்கப்படுகிறது.

அகமலையை தவிர்த்து மற்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் விளை பொருட்களை தலைச்சுமையாகவும், குதிரைகள் மூலமாகவும் ஒற்றையடி பாதையில் நடந்து வந்து, அகமலை மலைப்பாதைக்கு வருவார்கள். அங்கிருந்து வாகனங்களில் பொருட்களை கொண்டு செல்வது வழக்கம்.

இந்தநிலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், மக்கள் விளை பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வருவாய்த்துறை, போலீஸ் துறை, நெடுஞ்சாலைத்துறையினர் நேரில் வந்து பார்வையிட்டனர். பின்னர், பாறைகளை பொக்லைன் எந்திரம் வைத்து அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சோத்துப்பாறையில் இருந்து அகமலை கிராம மக்கள் சிலர் சுமார் 20 கிலோமீட்டர் தூரம் நடந்தே தங்கள் ஊருக்கு சென்றனர்.

மேலும் செய்திகள்