கவர்னர் உத்தரவு எதிரொலி: புதுவை ‘பீட்’ போலீசாரின் எண்ணிக்கை உயர்வு - சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை

கவர்னர் கிரண்பெடி உத்தரவு எதிரொலியாக போலீஸ் நிலையங்களில் ‘பீட்’ போலீசாரின் எண்ணிக்கையை அதிகரித்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2019-12-02 22:45 GMT
புதுச்சேரி, 

புதுவை கவர்னர் கிரண்பெடி கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் போலீஸ் நிலையங்களுக்கு சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அவர், புதுவையில் குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே போலீஸ் நிலையங்களில் ‘பீட்’ போலீசார் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் உத்தரவிட்டார்.

இதன் எதிரொலியாக புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் புதுச்சேரி, மாகி மற்றும் ஏனாம் ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் ‘பீட்’ செல்லும் போலீசாரின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி ‘பீட்’ போலீசாரின் எண்ணிக்கையை 144-ல் இருந்து 761 ஆக உயர்த்தி உள்ளார். இதில் உதவி சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு, போலீஸ்காரர்கள் அனைவரும் வழக்கமான பணிகளுக்கு இடையே ஒரு நாளைக்கு 3 மணி நேரம் வரை ‘பீட்’ செல்ல வேண்டும். இதில் பெண் போலீசாரும் அடங்குவார்கள்.

‘பீட்’ போலீசாரிடம் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை புகாராக தெரிவிக்கலாம். இதுபற்றி ‘பீட்’ போலீசார் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிக்கு தெரியப்படுத்தி பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்தநிலையில் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்