தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் கலெக்டர் சிவராசு பேட்டி

திருச்சி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

Update: 2019-12-02 22:45 GMT
திருச்சி,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி நேற்று காலை அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்கள் பூட்டப்பட்டன. திருச்சி மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 24 மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும், 241 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், 404 கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், 3,408 கிராம ஊராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கும் வருகிற 27, 30-ந் தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஊரக உள்ளாட்சி பகுதியில் மொத்தம் 12 லட்சத்து 21 ஆயிரத்து 17 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 5 லட்சத்து 96 ஆயிரத்து 962 பேரும், பெண்கள் 6 லட்சத்து 23 ஆயிரத்து 993 பேரும், திருநங்கைகள் 62 பேரும் ஆவார்கள்.

வாக்குச்சாவடிகள்

ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக செய்து வைத்துள்ளோம். வேட்பு மனுக்கள் படிவம் தயாராக உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கு 2,275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி ஊரக உள்ளாட்சி பகுதியில் 136 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகும். இவற்றில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நாளை(அதாவது இன்று) கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்காக தனி கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடைபெறுவதால் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெற முடியாது. இதனால் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் பொருந்தாது.

புகைப்படங்கள் அகற்றம்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள பகுதியில் அரசின் புதிய திட்டப்பணிகள் தற்போது எதுவும் தொடங்கப்படாது. ஏற்கனவே நிர்வாக அனுமதி பெற்ற பணிகள் நடைபெறும். ஊரக உள்ளாட்சி பகுதியில் அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. மேலும் அரசின் சாதனை விளக்க வாகனத்தில் அவர்களது புகைப்படங்கள் மறைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்