‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு ஜாமீன்

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட வழக்கில் கைதான வாணியம்பாடி மாணவரின் தந்தைக்கு தேனி கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

Update: 2019-12-03 22:30 GMT
தேனி,

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் 4 மாணவர்கள், ஒரு மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர் என மொத்தம் 10 பேரை தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் மாணவி மற்றும் மாணவர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. அவர்களின் பெற்றோர்களின் ஜாமீன் மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

பின்னர், சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன், மற்றொரு மாணவர் பிரவீணின் தந்தை சரவணன், மாணவர் ராகுலின் தந்தை டேவிஸ் ஆகியோருக்கு தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த வழக்கில் கைதான, தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்த, வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானுக்கு மதுரை ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது. ஆனால், அவருடைய தந்தை முகமது ‌ஷபியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது. அவர் தொடர்ந்து தேக்கம்பட்டியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், முகமது ‌ஷபிக்கு ஜாமீன் கேட்டு தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவின் மீது மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தினார்.

பின்னர், இந்த வழக்கில் முகமது ‌ஷபிக்கு ஜாமீன் வழங்கி மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை தொடர்பாக போலீசார் எப்போது அழைத்தாலும் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்