வரி விதிப்பு மூலம் உலக வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டு வருகிறது; நிர்மலா சீதாராமன்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மெக்சிகோ 50 சதவீதம் வரி விதித்துள்ளது;

Update:2025-12-17 13:15 IST

டெல்லி,

உக்ரைன், ரஷியா இடையிலான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் நிலையில், ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்க அரசு கடுமையான வரிவிதிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால், அமெரிக்காவில் இந்திய பொருட்களில் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனிடையே, இந்தியா, அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரு தரப்பும் பல்வேறு சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் 50 சதவீத வரி குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், வர்த்தக ஏற்றதாழ்வுகளை குறைப்பதாகவும் கூறி இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களுக்கு மெக்சிகோவும் 50 சதவீதம் வரி விதித்துள்ளது.

இந்நிலையில், வரி விதிப்பு மூலம் உலக வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டு வருவதாக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நிர்மலா சீதாராமன் கூறுகையில்,

வரி விதிப்பு மற்றும் பிற வழிகள் மூலம் உலக வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டு வருகிறது. வரி விதிப்பு விவகாரத்தை கவனமாக கையாண்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒட்டு மொத்தமாக நமது நாட்டின் பொருளாதார வலிமை நமக்கு கூடுதல் நன்மைகளை அளிக்கின்றன.

இந்தியா இதில் கவனமாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், கட்டணத்தை மட்டும் கவனித்துக் கொள்ளாமல், ஒட்டுமொத்தமாக நமது பொருளாதார வலிமையே நமக்கு கூடுதல் நன்மையைத் தரும் என்று நான் நினைக்கிறேன். வரி விதிப்பின் மன்னன் இந்தியா என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், வரி விதிப்பு ஆயுதமாக்கப்பட்டு வருகிறது.

என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்