நாகை.திருவள்ளுவன் கைது: பஸ்கள் மீது கல்வீசிய 4 பேர் சிக்கினர் - மேலும் 20 பேரை பிடித்து விசாரணை

தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் நாகை.திருவள்ளுவன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவம் நடந்தது. கல்வீசிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-03 21:45 GMT
தேனி, 

தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவராக இருப்பவர் நாகை.திருவள்ளுவன். மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, சுவர் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய நாகை.திருவள்ளுவனை கோவை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்த சம்பவம் எதிரொலியாக தேனி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பஸ்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் ஓடைப்பட்டியில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பஸ் மீது சிலர் கல் வீசினர். இதில், பஸ் முன்பக்க கண்ணாடி உடைந்து, பஸ் டிரைவரான கொடுவிலார்பட்டியை சேர்ந்த பாக்கியசெல்வன் (வயது 46) என்பவரின் கையில் காயம் ஏற்பட்டது.

அதேபோல் குமுளியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற அரசு பஸ் மீது, உப்புக்கோட்டை விலக்கு அருகில் கல்வீசப்பட்டது. இதில் பஸ் கண்ணாடி உடைந்தது. போடி சில்லமரத்துப்பட்டியில் 2 அரசு பஸ்கள் மீதும், மேலச்சொக்கநாதபுரத்தில் ஒரு அரசு பஸ் மீதும், உத்தமபாளையம் உ.அம்மாபட்டி விலக்கில் ஒரு அரசு பஸ் மீதும், தேனி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு அருகில் ஒரு அரசு பஸ் மீதும் கல் வீச்சு சம்பவம் நடந்தது. கல்வீச்சு சம்பவங்களில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 7 பஸ்களின் கண்ணாடிகள் உடைந்தன.

இந்த சம்பவம் தொடர்பாக போடி, வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி, தென்கரை, உத்தமபாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே தேனி கோர்ட்டு அருகில் பஸ் மீது கல் வீசியதாக, சரத்துப்பட்டி இந்திராகாலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் மோகன்தாஸ் (22), ஆண்டவர் மகன் செல்லத்துரை (22), முனியாண்டி மகன் ஆனந்தகண்ணன் (19), ராஜ் மகன் முத்து (19) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பிற இடங்களில் கல் வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக 20 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கல்வீச்சு சம்பவம் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் பஸ் நிலையங்கள், அரசு போக்குவரத்து கழகங்கள் ஆகிய இடங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாதுகாப்பு கருதி நேற்று அதிகாலையில் இயக்க வேண்டிய பஸ்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

இதனால், பஸ் நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்வதற்கு காத்திருந்த பயணிகள் மிகுந்த பரிதவிப்பை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. காலை 6.30 மணிக்கு பிறகே பஸ்கள் போக்குவரத்து பணிமனைகளில் இருந்து வெளியே வந்தன. அதன்பிறகே பஸ்கள் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்