100 நாள் வேலை திட்டத்தை அழிப்பதா? சோனியா காந்தி ஆவேசம்
100 நாள் வேலை திட்டத்தை ரத்து செய்வது பேரழிவை ஏற்படுத்தும் என சோனியா காந்தி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.;
புதுடெல்லி,
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு (100 நாள் வேலை திட்டம்) பதிலாக விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சோனியா காந்தி கூறியிருப்பதாவது:- கிராமப்புற மக்களின் துயரங்களைச் சமாளிப்பதற்கான வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் இப்போது புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் என்பது இந்திய அரசியலமைப்பின் 41-வது பிரிவால் வழங்கப்படும் உரிமைகள் சார்ந்த சட்டமாகும்.
இது குடிமக்களின் வேலை செய்யும் உரிமையைப் பாதுகாக்க அரசை வலியுறுத்துகிறது, ஆனால் எந்தவித விவாதமோ, ஆலோசனையோ இல்லாமலும், நாடாளுமன்ற நடைமுறைகள் அல்லது மத்திய-மாநில உறவுகளுக்கு மதிப்போ அளிக்காமல் இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. மகாத்மா காந்தியின் பெயரை நீக்கி இருப்பது வெறும் ஒரு முனையளவுதான். ஆனால் அந்த திட்டத்தின் மிகவும் இன்றியமையாத அதன் அடிப்படைக் கட்டமைப்பே அழிக்கப்பட்டுவிட்டது. வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக உயர்த்தியுள்ளதாக மோடி அரசு போலியான கூற்றுகளை முன்வைத்து வருகிறது. ஆனால் அது நிச்சயமாக நடக்கப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.