வடகாடு மலைப்பகுதியில் மழை: பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

வடகாடு மலைப்பகுதியில் பெய்த மழையினால் பரப்பலாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2019-12-03 22:30 GMT
சத்திரப்பட்டி,

ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு அருகே பரப்பலாறு அணை அமைந்துள்ளது. வடகாடு மலைப்பகுதியில் மழை பெய்தால் அணைக்கு நீர்வரத்து ஏற்படும். இங்கிருந்து திறந்து விடப்படுகிற தண்ணீர் சத்திரப்பட்டி, விருப்பாச்சி வழியாக கரூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் சேருகிறது.

அணையின் மூலம் திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 300 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் சத்திரப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் குடிநீர் ஆதாரமாகவும் அணை திகழ்கிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 90 அடி ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நீர்மட்டம் 35 அடியாக இருந்தது.

இந்தநிலையில் கடந்த 4 நாட்களாக வடகாடு மலைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து மள, மளவென நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 66.75 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 110 கனஅடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 3 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து வைக்கப்படுகிறது.

தொடர்ந்து மழை பெய்து வரும்பட்சத்தில் அணையின் நீர்மட்டம் இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் வடகாடு மலைப்பகுதியில் பெய்தமழை காரணமாக, ராமபட்டினம்புதூரில் உள்ள பெரியதுரையன் வாய்க்காலில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வாய்க்கால் வழியாக செல்லும் தண்ணீர், சத்திரப்பட்டி கருங்குளத்துக்கு செல்கிறது.

இந்த குளம் நிரம்பினால், அப்பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் குடிநீர், விவசாயம் செழிப்படையும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்