ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில், பருவமழை கைகொடுத்ததால் மானாவாரி பயிர்கள் விளைச்சல் அமோகம்

வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் மானாவாரி பயிர்களின் விளைச்சல் அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2019-12-04 22:15 GMT
ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை போதிய அளவில் பெய்யாத காரணத்தால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக மானாவாரி விவசாயம் அடியோடு பாதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான வடகிழக்கு பருவ மழை தேனி மாவட்டத்தில் பரவலாக பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

ஆண்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக விவசாயிகள் மானாவாரி நிலங்களில் கம்பு, சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்திருந்தனர். இந்தநிலையில் விவசாயிகள் எதிர்பார்த்தபடி பருவமழை கைகொடுத்துள்ளதால், பயிர்கள் செழிப்பாக வளர்ந்து விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்ட போது, கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை காலத்தின் போது ஒரு சில நாட்கள் மட்டுமே பலத்த மழை பெய்தது. அதன்பின்னர் மழை பெய்யாத காரணத்தால் நிலம் ஈரப்பதம் இன்றி காணப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு நிலத்தின் ஈரப்பதம் அதிகரிக்கும் வகையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்துள்ளதால் மானாவாரி விவசாயம் நல்ல பலனை கொடுத்து இருக்கிறது. தற்போது பயிரிடப்பட்டுள்ள மானாவாரி பயிர்கள் தை, மாசி மாதங்களில் அறுவடை செய்யப்படும் என்றனர்.

மேலும் செய்திகள்