பலத்த மழையால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 4 அடி அதிகரிப்பு

பலத்த மழையால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 4 அடி அதிகரித்துள்ளது.

Update: 2019-12-04 22:00 GMT
ஊத்துக்கோட்டை,

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த செப்டம்பர் 25-ந் தேதி பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 28-ந் தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது. நீர் வரத்து காரணமாக பூண்டி ஏரியில் நீர் மட்டம் கிடுகிடு என்று உயர்ந்ததால் அக்டோபர் மாதம் 6-ந் தேதி சென்னை குடிநீர் வாரியத்துக்கும், 11-ந் தேதி புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. கடந்த மாதம் 1-ந் தேதி முதல் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் இணைப்பு கால்வாய் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஆந்திராவில் உள்ள விவசாயிகள் நெல் சாகுபடிக்காக கிருஷ்ணா நதிநீரை எடுத்து வருவதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த 29-ந் தேதி பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி, 30-ந்தேதி மற்றும் இந்த மாதம் 1-ந் தேதிகளில் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் பூண்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி மழை நீர் வினாடிக்கு 851 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் 28-ந் தேதி பூண்டி ஏரியின் நீர் மட்டம் 25.05 அடியாக பதிவாகி இருந்தது. 977 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருந்தது. நேற்று காலை நீர் மட்டம் 29 அடியாக உயர்ந்தது.

அதாவது நீர் மட்டம் 4 அடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும். 1,518 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு கிருஷ்ணா நதி கால்வாயில் இருந்து வினாடிக்கு 585 கனஅடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு இணைப்பு கால்வாயில் வினாடிக்கு 450 கனஅடி தண்ணீர், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 21 கனஅடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

மேலும் செய்திகள்