திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மகாதீபத்திருவிழாவுக்காக கூடுதலாக 22 ரெயில்கள் இயக்க நடவடிக்கை - கலெக்டர் பேட்டி

கார்த்திகை மகாதீப திருவிழாவையொட்டி திருவண்ணாமலைக்கு கூடுதலாக 22 சிறப்பு ரெயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-04 22:30 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மகாதீபத்திருவிழா வருகிற 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதையொட்டி விழாவுக்கான ஏற்பாடுகளும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பது குறித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளதால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் திருவண்ணாமலையில் 15 தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. அந்த இடங்களை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின்போது கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் மூலம் 2 ஆயிரத்து 600 பஸ்களை 6 ஆயிரத்து 600 முறை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. கிரிவலப்பாதையில் பக்தர்கள் தங்களது உடைமைகளை வைக்க ஏதுவாக பாதுகாப்பறை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 90 இடங்களில் 24 ஆயிரம் கார்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக 22 ரெயில்கள் இயக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 11 இடங்களில் மருத்துவ குழுவினர் மற்றும் 15 ஆம்புலன்ஸ்கள், 3 நடமாடும் ஆம்புலன்ஸ்கள், 17இருசக்கர ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பரணி தீபத்தின் போது உபயதாரர்கள் 4 ஆயிரம் பேருக்கும் மகாதீபத்தின்போது 6 ஆயிரம் பேருக்கும் கோவிலுக்குள் செல்ல அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பரணி தீபத்தின் போது 2 ஆயிரம் பக்தர்களும், மகா தீபத்தின் போது 3 ஆயிரம் பக்தர்களும் பொது வரிசையில் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கழிவறை, பாதுகாப்பறை, சந்தை, தற்காலிக கடைகள் போன்றவற்றுக்கு கட்டணம் கிடையாது. கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம். இதற்காக விரைவில் வாட்ஸ்அப் எண் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சாமி தரிசனம் செய்யவிரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கட்டண டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து சிபி சக்ரவர்த்தி கூறுகையில், “கிரிவலப்பாதையில் 6 இடங்களில் 1000 வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்துவதற்கு 48 மணிநேரத்துக்கு முன்பு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம்” என்றார்.

மேலும் செய்திகள்