விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் - மனைவியை கொன்று நாடகமாடிய நகை வியாபாரி கைது

பெங்களூருவில், நகை வியாபாரி ஒருவர் தனது மனைவி விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது அவர், தனது மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2019-12-04 22:00 GMT
பெங்களூரு,

ராஜஸ்தானை சேர்ந்தவர் தேஜ்சிங்(வயது 27). நகை வியாபாரி. இவருடைய மனைவி தீபால்(27). 2 பேருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தேஜ்சிங், தனது மனைவி தீபாலுடன் பெங்களூரு உன்சேமாரனஹள்ளியில் வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 17-ந் தேதி தேஜ்சிங் தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் வாடகைக்கு கார் எடுத்தார். அதன்பிறகு தேஜ்சிங் தனது மனைவி தீபாலை அழைத்து கொண்டு காரை ஓட்டியபடி நந்தி மலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அதன்பிறகு தேஜ்சிங் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து பச்சஹள்ளி கேட் அருகே தனது மனைவி தீபால் அடையாளம் தெரியாத கார் மோதி இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அறிந்தவுடன் பெங்களூரு விமான நிலைய போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

மேலும் தேஜ்சிங்கிடம், போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தானும், தன்னுடைய மனைவியும் காரில் நந்தி மலைக்கு சென்று கொண்டிருந்தோம். திடீரென்று காரை நிறுத்தும்படி தீபால் கூறினார். இதனால் காரை நிறுத்தினேன். காரில் இருந்து தீபால் இறங்கியபோது அவ்வழியாக வந்த இன்னொரு கார் அவள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது என்று தெரிவித்தார். இருப்பினும் போலீசாருக்கு தேஜ்சிங் மீது சந்தேகம் இருந்தது.

இதனால் போலீசார் தேஜ்சிங்கின் நடவடிக்கையை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் தீபாலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட பிறகு தான் அவர் மீது கார் மோதியது தெரியவந்தது. இதனால் போலீசார் தேஜ்சிங்கை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, மனைவி தீபாலை கொலை செய்ததாக தேஜ்சிங் ஒப்புக்கொண்டார். இதையடுத்து தேஜ்சிங்கை போலீசார் கைது செய்தனர்.

சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றனர். வாக்குமூலத்தில் அவர் கூறியதாவது:-

எனக்கும், என்னுடைய மனைவி தீபாலுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதனால் நான் சந்தோஷமாக இல்லை. இதன் காரணமாக மனைவி தீபாலை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன். அதன்படி வாடகை காரில் அவரை அழைத்து கொண்டு நந்தி மலை நோக்கி சென்றேன். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தினேன். அப்போது தீபால் காரின் கதவை திறந்து வைத்திருந்தார். அந்த சமயத்தில் காரில் இருந்து அவரை வேகமாக கீழே தள்ளினேன். இதனால் அவள் கீழே விழுந்து தலையில் படுகாயம் அடைந்தாள். அதன்பிறகு அவள் மீது காரை ஏற்றி கொலை செய்து நாடகமாடினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்