தாம்பரத்தில் இருந்து கோட்டையை நோக்கி நடைபயணம் செல்ல முயன்ற பெண்கள் கைது - போலீசார் தடுத்ததால் சாலை மறியல்

தாம்பரத்தில் இருந்து கோட்டையை நோக்கி நடைபயணம் செல்ல முயன்றதை போலீசார் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-04 23:00 GMT
தாம்பரம், 

அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தமிழ் மாநில குழு சார்பில், வன்முறை மற்றும் போதைக்கு எதிராக கடந்த மாதம் 25-ந்தேதி வடலூர் மற்றும் திருவண்ணாமலை பகுதிகளில் இருந்து சுமார் 400 கிலோ மீட்டர் தூரம் கோட்டையை நோக்கி நடைபயணம் மேற்கொண்டனர். இதில் இரு குழுவாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

நேற்று முன்தினம் மாலை சென்னையை அடுத்த தாம்பரம் வந்தடைந்த இவர்கள், ஒரு தனியார் மண்டபத்தில் தங்கினர். நேற்று காலை இவர்கள், தாம்பரத்தில் இருந்து கோட்டையை நோக்கி நடைபயணம் சென்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுக்க திட்டமிட்டு இருந்தனர்.

இதற்காக தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஒன்று கூடினர். பின்னர் அனைவரும் கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல தயாராக இருந்தனர். அப்போது தெற்கு இணை கமிஷனர் மகேஸ்வரி தலைமையில் பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகர் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார், கோட்டைக்கு நடைபயணம் செல்ல அனுமதி இல்லை என்று கூறி ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்களை தடுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள், தாம்பரம் பஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் அமர்ந்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் சுமார் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களை போலீசார் கைது செய்து, குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பஸ்சில் ஏற்றி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். கைக்குழந்தையுடன் பங்கேற்ற பெண்களும் கைதானார்கள். சில பெண்கள் போலீசாருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

அதேபோல மேற்கு தாம்பரம், வெங்கடேசன் தெருவில் இருந்த மற்றொரு குழுவையும் போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். தாம்பரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கைதான சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்