சகோதரர்கள் சண்டையை விலக்கிய போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு வெறிச்செயலில் ஈடுபட்ட விவசாயி கைது

திருமானூர் அருகே சகோதரர்களுக்கு இடையே நடந்த சண்டையை விலக்கிய போலீஸ் ஏட்டுவை அரிவாளால் வெட்டிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-08 23:00 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலராமநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன்கள் சுதாகர்(38), பாஸ்கர்(35). இருவருமே விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே அண்ணன், தம்பி இருவருக்கும் இடையே நிலத் தகராறு காரணமாக பிரச்சினை இருந்து வந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக பாஸ்கர், தனது அண்ணன் சுதாகர் மீது தூத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சுதாகரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்த சுதாகர், தனது தம்பி பாஸ்கர் மீதும், போலீசார் மீதும் கடும் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பாஸ்கர் மேலராமநல்லூர் கிராமத்தில் அவர் கட்டியிருந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வந்திருந்தனர்.

இத்துடன் பாஸ்கர் உடன் நட்பு ரீதியிலான பழக்கத்தில் இருந்த தூத்தூர் போலீஸ் நிலைய ஏட்டு ஆனந்தனும்(38) நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது அங்கு வந்த சுதாகர், தனது தம்பி பாஸ்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறில் ஈடுபட்டார். இதனை பார்த்த போலீஸ் ஏட்டு ஆனந்தன் இருவரையும் விலக்கி விட்டுள்ளார்.

போலீஸ் ஏட்டுக்கு அரிவாள் வெட்டு

இதில் ஆத்திரமடைந்த சுதாகர், நீயும், என் தம்பியும் கூட்டாளிகளா, அவனுக்கு ஏன் முழுவதுமாக ஆதரவு செய்கிறாய் என்று கூறி தனது கையில் வைத்திருந்த அரிவாளால் ஆனந்தனை சரமாரியாக வெட்டினார்.

இதில் ஆனந்தனுக்கு கை மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீஸ் ஏட்டு ஆனந்தனை வெட்டிய சுதாகரை, அப்பகுதியினர் பிடித்து கட்டி வைத்தனர்.

பின்னர் இதுகுறித்து தூத்தூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் தூத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமே‌‌ஷ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுதாகரை கைது செய்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்