அரசின் திட்டங்கள் ஏழைகளை சென்றடைய அங்கன்வாடி ஊழியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் -அமைச்சர் கந்தசாமி பேச்சு

அரசின் நலத்திட்டங்கள் ஏழை மக்களை சென்றடைய அங்கன்வாடி ஊழியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Update: 2019-12-08 22:45 GMT
பாகூர். 

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி கிருமாம்பாக்கத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு மருத்துவ அதிகாரி நாராயணன் முன்னிலை வகித்தார். குழந்தைகள் நல அதிகாரி அமுதவள்ளி வரவேற்றார். அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தற்போது பெரும்பாலும் படித்தவர்களே தாய்மார்களாக உள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் சத்தான உணவு குறித்து தெரிந்து கொள்ள அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. முன்பு 9 மாதம் 6 மாதம் விளைந்த அரிசி சாப்பிட்டு வந்தோம். இப்போது 3 மாதத்திலேயே விளைந்துவிடும் அரிசியை பயன்படுத்துகிறோம். இதற்காக பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்துகிறோம்.

வாழ்நாளை அதிகரிக்க இயற்கை உணவிற்கு மாற வேண்டும். மாடி தோட்டம் அமைத்து காய்கறிகள் அதிகம் உண்ண வேண்டும். இதற்காக 50 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.

புதுவையில் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கிறார்கள். அதே சமயம் அரசு துறைகளில் 7 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. பணியிடங்களை நிரப்ப போதிய நிதியில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இலவச திட்டங்கள் அனைத்தும் ஏழைகளுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும் என்பது என் நிலைப்பாடு. வசதி படைத்தவர்கள் விட்டு தர வேண்டும். ஏழைகளுக்கு அரசின் நல திட்டங்கள் சென்றடைய அங்கன்வாடி ஊழியர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கர்ப்பிணிகள், அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்