தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையின் கண் மருத்துவ பிரிவு மண்டல மருத்துவமனையாக தரம் உயர்வு

தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையின் கண் மருத்துவ பிரிவை மண்டல மருத்துவமனையாக தமிழகஅரசு தரம் உயர்த்தி, 120 படுக்கைளுடன் புதிய கட்டிடம் கட்ட ரூ.16½ கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

Update: 2019-12-08 23:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை நகரின் மையப்பகுதியில் ராசாமிராசுதார் அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் கண் மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவ பிரிவுக்கு கடந்த 1919-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 13-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு, பின்னர் தொடங்கப்பட்டது.

கண் மருத்துவ பிரிவு என்றாலும், இங்கு கண்புரை அறுவை சிகிச்சை, கருவிழி, கண் அழுத்த நோய், விழித்திரை, கண் வங்கி போன்ற பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். தொடக்கத்தில் 50 பேரில் இருந்து 100 பேர் வரை நாள்தோறும் சிகிச்சைக்கு வந்தனர். பின்னர் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது நாளொன்றுக்கு 700 பேருக்கு மேல் வருகின்றனர்.

அலங்கார வளைவு

2018-19-ம் ஆண்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அரசு மருத்துவமனை கண் மருத்துவ பிரிவில் தமிழகஅளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மருத்துவ பிரிவு செயல்படும் கட்டிடம் முழுவதும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. ஆசியாவிலேயே பழமையான கட்டிடமாக திகழ்கிறது. கண் மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நூற்றாண்டு நினைவு அலங்கார வளைவு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

நூற்றாண்டு விழா காணும் கண் மருத்துவ பிரிவை தரம் உயர்த்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கண் மருத்துவ பிரிவை மண்டல கண் மருத்துவமனையாக தரம் உயர்த்தி தமிழகஅரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்காக 120 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை கட்ட ரூ.16 கோடியே 47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் கருத்து

இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் கூறும்போது, உலகில் பழமையான கண் மருத்துவ பிரிவில் 3-ம் இடத்தில் தஞ்சை உள்ளது. 1809-ம் ஆண்டு லண்டனில் தொடங்கப்பட்ட மார்பீல்டு தான் உலகின் முதல் கண் மருத்துவமனை. அதற்கு அடுத்து 2-வது இடத்தில் இருப்பது 1819-ம் ஆண்டு ஜூலை மாதம் டாக்டர் ராபர்ட் ரிச்சர்ட்சன்னால் ராயப்பேட்டையில் தொடங்கப்பட்ட மெட்ராஸ் கண் மருத்துவமனை தான். இடப்பற்றாக்குறையின் காரணமாக 1844-ம் ஆண்டு சென்னை எழும்பூருக்கு மாற்றப்பட்டது. அதற்கு அடுத்ததாக தஞ்சை ராசாமிராசுதார் அரசு மருத்துவமனையின் கண் மருத்துவ பிரிவு தான். இங்குள்ள கட்டிடம் ஆங்கிலேயர் கால பாணியில் கட்டப்பட்டுள்ளதால் அவற்றை தற்போது ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைப்பு செய்யப்பட உள்ளது என்றார்.

மேலும் செய்திகள்