மாவட்டம் முழுவதும் 3,106 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 3,106 பதவிகளுக்கு 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

Update: 2019-12-08 22:15 GMT
நாமக்கல்,

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக கிராம ஊராட்சி பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளை பொறுத்தவரையில் 17 மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர்கள், 172 ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர்கள், 322 ஊராட்சி மன்ற தலைவர்கள், 2,595 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 106 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர், ஒன்றியகுழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தொடர்புடைய ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்பட உள்ளது. வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வருகிற 16-ந் தேதி கடைசிநாள் ஆகும். இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

வாக்குச்சாவடிகள் தயார்

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளை பொறுத்த வரையில் 4 லட்சத்து 22 ஆயிரத்து 116 ஆண் வாக்காளர்கள், 4 லட்சத்து 38 ஆயிரத்து 749 பெண் வாக்காளர்கள், 31 திருநங்கைகள் என மொத்தம் 8 லட்சத்து 60 ஆயிரத்து 896 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிக்க வசதியாக மாவட்டம் முழுவதும் 1,729 வாக்குச்சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

முதல்கட்டமாக வருகிற 27-ந் தேதி கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் வெண்ணந்தூர் என 8 ஊராட்சி ஒன்றியங்களில் 1,579 பதவிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

மேலும் செய்திகள்