வேதாரண்யம் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி பலி

வேதாரண்யம் அருகே கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி பலியானார். அவர் வளர்த்து வந்த 15 ஆடுகளும் தீயில் கருகி இறந்தன.

Update: 2019-12-09 23:00 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள அண்டர்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி அஞ்சம்மாள் (வயது 78). கூரை வீட்டில் வசித்து வந்த இவர், ஆடு வளர்த்து வந்தார். அந்த ஆடுகளை வீடு அருகே கொட்டகையில் அடைத்து வைத்திருந்தார்.

நேற்று இரவு வீட்டு கூரையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மள மளவென வீடு முழுவதும் பரவியது. அப்போது அஞ்சம்மாள் கொட்டகையில் இருந்து ஆடுகளை வெளியேற்றி அவற்றை காப்பாற்ற முயன்றார்.

தீயில் கருகி சாவு

ஆனால் துரதிர்‌‌ஷ்டவசமாக அவரும் கொட்டகைக்குள் சிக்கிக்கொண்டார். இதில் உடல் கருகி அஞ்சம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன், அவர் வளர்த்து வந்த 15 ஆடுகளும் தீயில் கருகி இறந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த வேதாரண்யம் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

போலீசார் விசாரணை

சம்பவம் நடந்த பகுதியில் வேதாரண்யம் தாசில்தார் சண்முகம், துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வீட்டில் கொசு தொல்லையை கட்டுப்படுத்துவதற்காக புகை போட்டபோது எதிர்பாராதவிதமாக கூரையில் தீப்பிடித்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கூரை வீடு தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி ஒருவர் உடல் கருகி பலியான சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்