வருகிற 31-ந் தேதி வரை காலக்கெடு பெயர் பலகைகளில் கன்னட மொழியை இடம்பெற செய்வது கட்டாயம் பெங்களூரு மாநகராட்சி மேயர் கவுதம் குமார் தகவல்

பெயர் பலகைகளில் கன்னட மொழியை இடம்பெற செய்வது கட்டாயம் என்றும், இதற்கு இம்மாதம்(டிசம்பர்) 31-ந் தேதி வரை காலக்கெடு அளிக்கப்பட்டு உள்ளது என்றும் மாநகராட்சி மேயர் கவுதம் குமார் கூறினார்.

Update: 2019-12-11 22:30 GMT
பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங் களில் உள்ள பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி இடம் பெற்றிருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதை பின்பற்றாதவர்களின் வணிக உரிமங்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

இந்த நிலையில் பெயர் பலகைகளில் கன்னட மொழியை இடம் பெற செய்வது மற்றும் விளம்பர பேனர்கள் அகற்றம் குறித்து மாநகராட்சி மேயர் கவுதம் குமார், மாநகராட்சி மண்டல இணை கமிஷனர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆளும் கட்சி தலைவர் முனீந்திர குமார், எதிர்க்கட்சி தலைவர் அப்துல் வாஜித், இணை கமிஷனர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்துக்கு பிறகு மேயர் கவுதம் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

27 ஆயிரம் பேருக்கு நோட்டீசு

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், தொழில் நிறுவனங்களில் உள்ள பெயர் பலகைகளில் 60 சதவீதம் கன்னட மொழி இடம் பெற செய்ய வேண்டும். இதை செய்யாமல் உள்ள 27 ஆயிரம் வியாபாரிகளுக்கு நோட்டீசு கொடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

பெங்களூரு நகரில் உள்ள பெயர் பலகைகளில் கன்னட மொழியை இடம்பெற செய்ய டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் அவர்கள் அதை செய்யாத பட்சத்தில் வணிகத்துக்கான உரிமம் ரத்து செய்யப்படும். அவர்களின் கடைகளுக்கு பூட்டு போடப்படும். கர்நாடக தொழில் மற்றும் வணிக கூட்டமைப்பினர் அறிவுரை கூறாமல் கன்னட மொழி பெயர் பலகையை நிறுவ வேண்டும். கன்னட நாடு மற்றும் கன்னட மொழி மீது கவுரவம் இல்லாதவர்களிடம் எந்த சம்பந்தத்தையும் வைத்து கொள்ள பெங்களூரு மாநகராட்சி விரும்பவில்லை.

விளம்பர பலகை அகற்ற உத்தரவு

பெங்களூரு நகரில் விளம்பர பலகை மற்றும் விளம்பர பேனர்களை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதை முறையாக பின்பற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் விளம்பர பேனர்கள் அகற்றும் பணியின்போது அதிகாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி போலீசாருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்