பழனி கோவிலுக்கு வாகனங்கள் வருகை அதிகரிப்பு: கூடுதலாக சுற்றுலா பஸ்நிலையம் அமைக்கவேண்டும் - பக்தர்கள் கோரிக்கை

பழனி கோவிலுக்கு பக்தர்கள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கூடுதலாக சுற்றுலா பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Update: 2019-12-11 22:15 GMT
பழனி,

பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், கழிப்பிடம் என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக மேற்கு, கிழக்கு கிரிவீதியில் சுற்றுலா பஸ்நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பக்தர்கள் தங்கள் வாகனங்களை கட்டணமின்றி நிறுத்தி செல்கின்றனர்.

இந்நிலையில் தற்போது சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. குறிப்பாக சபரிமலைக்கு பக்தர்கள் பஸ், கார்களில் அதிகமாக வருகின்றனர். அவ்வாறு வரும் வாகனங்களை சுற்றுலா பஸ்நிலையத்தில் நிறுத்துவதற்கு போதிய இடமில்லாத நிலை நிலவுகிறது. அதாவது பஸ்நிலையம் சில நேரங்களில் வாகனங்களால் நிரம்பிவிடுகிறது. எனவே அவர்கள் கிரிவீதியில் தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் விபத்து நடக்கும் அபாயமும் உள்ளது.

எனவே பழனி முருகன் கோவிலுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு கூடுதலாக சுற்றுலா பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, சபரிமலை சீசனை, தொடர்ந்து தைப்பூசமும் வர இருக்கிறது. தற்போதுள்ள கால சூழ்நிலையில் பெரும்பாலான பக்தர்கள் தங்கள் சொந்த வாகனங்களிலேயே அதிகம் வருகின்றனர். ஆகவே கிழக்குகிரிவீதி பகுதியில் உள்ள சுற்றுலா பஸ்நிலையத்துக்கு அருகே உள்ள நிலங்களை கோவில் நிர்வாகம் கையகப்படுத்தி அங்கு சுற்றுலா பஸ்நிலையம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் பொள்ளாச்சி பைபாஸ் சாலையில் இருந்து வாகனங்களை கொண்டு வர எளிதாக இருக்கும்.

மேலும் ரோப்கார் நிலையம் அருகே உள்ளதால் எளிதாக கோவிலுக்கு சென்றுவர முடியும். கிரிவீதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும். இதனால் பக்தர்களும் கிரிவலம் செல்லும்போது விபத்து ஏற்படுவது குறைக்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட கோவில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்