அமித்ஷா உருவ பொம்மை எரிப்புக்கு கண்டனம்: பல்கலைக்கழகம் முன்பு பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம்

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்தவர்களை கைது செய்யக்கோரி பல்கலைக்கழகம் முன்பு பா.ஜ.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-12-11 22:45 GMT
காலாப்பட்டு,

நாடாளுமன்றத்தில் தேசிய குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள பாண்லே பால் விற்பனை நிலையம் அருகே முஸ்லிம் மாணவர்கள் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்தனர்.

இது குறித்து புதுவை பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் காலாப்பட்டு போலீசார் பெயர் குறிப்பிடாமல் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ.க. போராட்டம்

அமித்ஷாவின் உருவபொம்மை எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க.வினர் நேற்று பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர்கள் செல்வம், ஏம்பலம் செல்வம், பொதுச்செயலாளர் தங்க விக்ரமன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் உருவ பொம்மையை எரித்த மாணவர்களை கைது செய்ய வேண்டும், அவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பேச்சுவார்த்தை

இது பற்றிய தகவல் அறிந்த உடன் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருக்கும் பா.ஜ.க.வினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்பின்னர் முக்கிய நிர்வாகிகள் மட்டும் பல் கலைக்கழக பதிவாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர், இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்