கோபி அருகே துணிகரம்: அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை

கோபி அருகே அரசு அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2019-12-12 22:15 GMT
கடத்தூர்,

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பார்வதி நகரை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 69). இவர் அரசு நிறுவனத்தில் தணிக்கை ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

அவருடைய மனைவி பூவாயாள். இவர்களுடைய மகன் கார்த்திக். இவர் திருமணம் ஆகி குடும்பத்துடன் கோபியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பூவாயாள் உடல்நலக்குறைவு காரணமாக மகன் கார்த்திக் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். மாணிக்கம் குள்ளம்பாளையத்தில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் மாணிக்கம் கடந்த 10-ந் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு கோபியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்றார். அங்கு இரவு தங்கிவிட்டு் மறுநாள் காலை தனது வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டின் கேட் திறந்து கிடந்தது. மேலும் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.

அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்தது. அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. பீரோவை பார்த்தபோது அதில் வைக்கப்பட்டு இருந்த தங்க மாங்காய் மாலை, தங்க சங்கிலி, வளையல் ஆகியவற்றை காணவில்லை.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவு வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்கள். பின்னர் பீரோவையும் உடைத்து திறந்துள்ளார்கள்.

அதில் இருந்த 18 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு சென்றது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1¾ லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணிக்கம் கோபி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை கொள்ளையடித்துவிட்டு் தப்பிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அரசு அதிகாரி வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்