நாகையில், அரசு மருத்துவக்கல்லூரி பணிகளை உடனடியாக தொடங்கக்கோரி கடையடைப்பு-ஊர்வலம்

நாகையில், அரசு மருத்துவக்கல்லூரி பணிகளை உடனடியாக தொடங்கக்கோரி கடையடைப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் நடந்தது. இதற்காக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

Update: 2019-12-12 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை அருகே ஒரத்தூரில் 60 ஏக்கரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைக்க மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதையடுத்து மருத்துவ கவுன்சில், ஒரத்தூரில் அரசு மருத்துவக்கல்லூரி அமைவதற்கு தேவையான அனைத்து ஆய்வுகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் அரசு மருத்துவக்கல்லூரியை அமைக்க வேண்டும். அதற்கு தேவையான இடம் நீடுரில் உள்ளது என்று கோரி அந்த பகுதி பொதுமக்கள் கடந்த சில தினங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதையடுத்து நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று இந்திய வர்த்தக தொழிற் குழுமம், அனைத்து கட்சிகள், வணிகர் சங்கங்கள், சேவை சங்கங்கள், மீனவ சங்கங்கள், தொழிலாளர் சங்கங்கள் நேற்று முன்தினம் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஊர்வலம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றினர்.

கடையடைப்பு

அதன்படி நாகையில் பெரிய மார்க்கெட், பப்ளிக் ஆபீஸ் சாலை, வெளிப்பாளையம், மேலகோட்டை வாசல்படி, பழைய மற்றும் புதிய பஸ் நிலையம் என அனைத்து பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் வெளியூர்களில் இருந்து நாகை வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உணவு உள்ளிட்ட பொருட்கள் கிடைக்காமல் மிகுந்த அவதியடைந்தனர்.

பெரும்பாலான ஷேர் ஆட்டோக்களும் இயங்கவில்லை. இந்த போராட்டம் காரணமாக நாகையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

இந்த போராட்டத்திற்கு நாகை அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், ஆரியநாட்டு தெரு மீனவ பஞ்சாயத்தார்கள் சார்பில் ஆதரவு அளிக்கப்பட்டது. நாகையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் இயக்கப்படவில்லை. மேலும் நாகை, ஆறு்காட்டுதுறை உள்ளிட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

கரை திரும்பிய மீனவர்கள் கடலில் பிடித்துக்கொண்டு வந்த மீன்களை அக்கரைப்பேட்டை மீன்பிடி இறங்கு தளத்தில் விற்பனை செய்யாமல் வைத்தனர். இதனால் ஏலக்கூடங்களில் வியாபாரிகள், பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

இதேபோல் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக நாகையில் 75 வக்கீல்கள் நேற்று ஒருநாள் மட்டும் கோர்ட்டு புறக்கணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

ஊர்வலம்

முன்னதாக நாகையில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமான பணிகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தொடங்க வலியுறுத்தி நாகை அவுரித்திடலில் இருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தில் இந்திய வர்த்தக தொழிற்குழும தலைவர் ரவி, முன்னாள் அமைச்சர்கள் ஜெயபால், ஜீவானந்தம், மதிவாணன் எம்.எல்.ஏ., நாகை தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கவுதமன், அ.தி.மு.க. நகர செயலாளர் தங்க.கதிரவன் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இந்த ஊர்வலம் நாகை பப்ளிக் ஆபீஸ் சாலை, வெளிப்பாளையம் வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் இந்திய வர்த்தக தொழிற்் குழும தலைவர் ரவி கோரிக்கை மனு அளித்தார். இந்த ஊர்வலத்தால் அனைத்து வாகனங்களும் நாகை கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டன.

மேலும் செய்திகள்