கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 6 பேர் கைது

சேலத்தில் இருந்து கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-12-12 23:00 GMT
சேலம், 

சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள முல்லை நகரில் ரேஷன் அரிசி கடத்த முயற்சிப்பதாக சேலம் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு 2 சரக்கு வேன்களில் இருந்து ஒரு டிப்பர் லாரியில் சிலர் ரேஷன் அரிசியை ஏற்றிக்கொண்டு இருந்தனர். அவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதையடுத்து அவர்களை இரும்பாலை ரோட்டில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், தாதகாப்பட்டியை சேர்ந்த கோபி (வயது 35), அன்னதானப்பட்டியை சேர்ந்த குரு (30), கார்த்திக் (27), ராஜா (27), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த அசோக் (24), கண்ணையன் (55) என்பது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் இலவச ரேஷன் அரிசியை பொதுமக்களிடம் இருந்து ரூ.5-க்கு மேல் வாங்கியுள்ளனர். இவ்வாறு திருச்செங்கோடு, பள்ளிபாளையம், சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் ரேஷன் அரிசி வாங்கி இருக்கிறார்கள்.

இந்த அரிசி மொத்தமாக சாக்கு மூட்டைகளில் கட்டி 2 சரக்கு வேன்களில் சீலநாயக்கன்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. இதனிடையே ஏற்கனவே அங்குள்ள ஒரு குடோனில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டன. பின்னர் அவர்கள் ஒரு லாரியில் கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதற்காக ஏற்றி கொண்டு இருந்தனர் என்பது தெரியவந்தது.

மேலும் ரேஷன் அரிசி கர்நாடக மாநிலத்தில் உள்ள மாவு மில்லிற்கு கடத்த முயன்ற போது 6 பேரும் போலீசாரிடம் சிக்கியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 5 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 சரக்கு வேன்கள், ஒரு டிப்பர் லாரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்