குடகனாறு அணையில் தண்ணீரை தேக்க நடவடிக்கை - விவசாயிகள் வலியுறுத்தல்

குடகனாறு அணையில் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Update: 2019-12-18 22:15 GMT
வேடசந்தூர்,

பழனி மலையின் கிழக்கு அடிவாரப்பகுதியில் இருந்து குடகனாறு தொடங்குகிறது. இந்த ஆற்றின் நீர்வரத்துக்கு மாங்கரையாறு, சந்தனவர்த்தினி ஆறு, வரட்டாறு, மான்கோம்பையாறு ஆகிய சிற்றாறுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆத்தூர், திண்டுக்கல், வேடசந்தூர் வழியாக ஆற்றில் செல்லும் தண்ணீர் அழகாபுரியில் உள்ள குடகனாறு அணையில் தேங்கி நிற்கும்.

வேடசந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளின் விவசாய ஆதாரமாக அணை திகழ்கிறது. இதன் மூலம் வேடசந்தூர் பகுதியில் 3 ஆயிரத்து 663 ஏக்கர் நிலமும், கரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 337 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் அணையில் தண்ணீர் தேங்கினால், அதனை சுற்றியுள்ள பாலப்பட்டி, காசிபாளையம், விருதலைப்பட்டி, கூவக்காபட்டி, கூம்பூர் ஊராட்சிகளில் உள்ள விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயரும். இதேபோல் அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் அணை விளங்குகிறது.

கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் அணை வறண்டு இருந்தது. தற்போது பருவமழை பெய்து வந்தநிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பின. ஆனால் அழகாபுரி குடகனாறு அணைக்கு தண்ணீர் வரவில்லை. அணையின் உட்பகுதியில் சிறிதளவு மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கிறது.

இந்தநிலையில் 15 ‌‌ஷட்டர்களை கொண்ட குடகனாறு அணையில், 4 பழைய ‌‌ஷட்டர்களின் உறுதிதன்மை மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆத்தூர் காமராஜர் அணையின் அருகே குடகனாற்றில் மழைநீர் வராமல் தடுத்து, அருகே உள்ள கிராமங்களுக்கு செல்லும் வாய்க்காலில் தண்ணீர் திருப்பி விடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடகனாற்றில் தண்ணீர் வராத நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே குடகனாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடினால், அணையில் பழுதடைந்த நிலையில் உள்ள 4 ‌‌ஷட்டர்கள் உடைய வாய்ப்பு உள்ளது. இதனால் அந்த ‌‌ஷட்டர்களின் மேல்பகுதியில், 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகள் நிரம்பி வரும் சூழலில், குடகனாறு அணை மட்டும் தண்ணீர் இன்றி காணப்படுவதால், வேடசந்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து வருகிற தண்ணீரை குடகனாற்றில் திருப்பி விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் குடகனாறு அணையில் பழுதான நிலையில் உள்ள பழைய ‌‌ஷட்டர்களை சீரமைத்து வருடம் முழுவதும் தண்ணீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேடசந்தூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்