பெரியகுளத்தில், சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல்

பெரியகுளத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பரிதவித்து வருகின்றனர்.

Update: 2019-12-19 22:00 GMT
பெரியகுளம்,

பெரியகுளம் தென்கரை பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இந்த காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இதேபோல் மார்க்கெட்டின் வெளிப்பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் பலர் கடை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மார்க்கெட் பகுதியில் கடை நடத்தும் பலர் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட கடைகளுக்கு முன்பு ஆக்கிரமித்து காய்கறிகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால் மார்க்கெட்டுக்குள் நடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதேபோல் மார்க்கெட்டின் வெளிப்பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து சிலர் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் மார்க்கெட்டுக்கு வரும் பலர் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையின் இருபுறமும் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் நடக்க முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும் நெரிசலான கடைவீதி பகுதியில் ஆட்டோக்களும், கார்களும் அடிக்கடி சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதேபோன்று தென்கரை சுதந்திர வீதியிலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதால், அந்த வழியாக பஸ்கள் மற்றும் வாகனங்கள் மிகவும் சிரமத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் மற்றும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்வதால் விரைந்து செல்ல முடியாமல் தாமதம் ஏற்படுகிறது. நகராட்சி சார்பில் அவ்வப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றினாலும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றவும், போக்குவரத்து நெரிசலை சரிசெய்யவும் நகராட்சி நிர்வாகம் மற்றும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்