வீடுகளை காலி செய்ய ரெயில்வே நிர்வாகத்தினர் நோட்டீஸ்: மாற்று இடம் வழங்க கோரி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

சேலம் அருகே வெள்ளக்கல்பட்டியில்வீடுகளை காலிசெய்யரெயில்வே நிர்வாகத்தினர் நோட்டீஸ் வழங்கியதால் மாற்று இடம் வழங்க கோரி நேற்றுகலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-12-23 23:00 GMT
சேலம்,

சேலம் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் போலீசாரிடம் கூறியதாவது:-

எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். ஏழை, எளிய மக்களாகிய நாங்கள் கூலிவேலை தான் செய்து வருகிறார்கள். இதில் சிலர் கடன் வாங்கி வீடுகளை கட்டி குடியிருந்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் இடம் ரெயில்வே துறைக்கு சொந்தமானது. ஆனாலும் ஆதார் கார்டு, ரே‌‌ஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளோம். வீட்டு வரி, மின்கட்டணம் செலுத்தி வருகிறோம். இதனிடையே தண்டவாளம் அமைக்க உள்ளதாகவும், வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றும் ரெயில்வே நிர்வாகத்தினர் 2 முறை நோட்டீஸ் வழங்கி உள்ளனர்.

மாற்று இடம்

இதனிடையே நேற்று காலை சிலர் அங்கு உள்ள காலி இடத்தில் மண்ணை சமன்செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் வீடுகளை காலிசெய்யுமாறு மிரட்டுகிறார்கள். எங்களுக்கு மாற்று இடங்கள் இல்லை. இதனால் நாங்கள் எங்கே செல்வது என்றே தெரியவில்லை. இதன் காரணமாக நாங்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளோம். எனவே அங்கிருக்கும் அனைவருக்கும் மாற்று இடம் வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த இடத்தில் இருந்து காலி செய்ய 3 மாதகாலம் அவகாசம் வழங்க வேண்டும். எங்கள் வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதைக்கேட்ட போலீசார், நீங்கள் (பொதுமக்கள்) கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு செல்லுங்கள். அதன் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்றனர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முற்றுகை போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்