அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் மீது புகார்

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அ.தி.மு.க. பிரமுகர் மீது புகார்.

Update: 2019-12-23 22:30 GMT
சேலம்,

சேலம் கந்தம்பட்டி அடுத்த கிழக்கு திருவாக்கவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் சித்தேஸ்வரன். எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் நேற்று தனது மனைவி திவ்யபாரதியுடன் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில், எனக்கு அரசு வேலை வாங்கி தருவதாக உறவினர் ஒருவர் மூலம் அரியானூரை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரை சந்தித்தேன். அவர் அப்போது பள்ளப்பட்டி கூட்டுறவு சங்க தலைவராக இருந்தார். இவர் என்னிடம் பள்ளப்பட்டி கூட்டுறவு சங்கத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகரிடம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் கொடுத்தேன். அதன்பின்னர் கூட்டுறவு சங்கத்தில் வேலை வழங்கப் பட்டது. ஆனால் 8 மாத காலம் சம்பளம் வழங்காமல் வேலை செய்து வந்தேன். இதன் காரணமாக நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானேன். இதனால் அவரிடம் வேலை வாங்கி தருவதாக கூறி வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவரிடம் கேட்டேன். ஆனால் அவர் பணத்தை திருப்பி தருவதாக கூறி என்னை பல முறை அலைக்கழித்தார். இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் புகார் கொடுத்தேன். இதையடுத்து அ.தி.மு.க. பிரமுகர் ரூ.2 லட்சத்தை திருப்பி கொடுத்ததுடன், மீதி பணத்தை விரைவில் கொடுத்துவிடுவதாக கூறினார். அதன்பிறகும் மீதமுள்ள ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை திருப்பி தரவே இல்லை. எனவே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்த அ.தி.மு.க. பிரமுகரிடம் இருந்து எனக்கு மீதி பணத்தை திரும்ப கிடைக்கவும், அவர் மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்