மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தம்பதி தர்ணா போராட்டம்

மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் தம்பதியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-23 22:45 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் தாலுகா சத்தியகண்டனூரை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 45). இவர் நேற்று காலை தனது மனைவி பூவழகியுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு வந்த இவர்கள் இருவரும் திடீரென அங்கு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட இருவரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறுகையில், முன்விரோதம் காரணமாக அதே கிராமத்தை சேர்ந்த 2 பேர், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட எங்கள் மகன் திருமலையை (வயது 15) அடித்துக்கொலை செய்து விட்டனர். இதை தடுக்க வந்த எங்களையும் அவர்கள் இருவரும் சேர்ந்து தாக்கினர்.

இதுகுறித்து அரகண்டநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எங்கள் மகனின் மரணத்திற்கு நீதி வேண்டும், அவரை கொலை செய்த 2 பேர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற அண்ணாமலை, பூவழகி ஆகிய இருவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

மேலும் செய்திகள்