டயர் வெடித்ததால் தாறுமாறாக ஓடிய கார், பஸ் மீது மோதல்; ஓட்டல் உரிமையாளர் பலி - 3 பேர் படுகாயம்

கொடைரோடு அருகே காரின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடி பஸ் மீது மோதியது. இதில் ஓட்டல் உரிமையாளர் பலியானார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2019-12-24 22:15 GMT
கொடைரோடு,

கர்நாடக மாநிலம் பெங்களூரு சஞ்சீவி நகரை சேர்ந்தவர் ராஜே‌‌ஷ்பை (வயது 46). இவர் ஓட்டல் நடத்தி வந்தார். இவருடைய சொந்த ஊர் கேரள மாநிலம் ஆலப்புழா ஆகும். இந்நிலையில் நேற்று முன்தினம் ராஜே‌‌ஷ்பை, தனது நண்பர்களான பெங்களூருவை சேர்ந்த திலீப்குமார், சங்கரகவுடா, குமார் ஆகியோருடன் பெங்களூருவில் இருந்து ஆலப்புழாவுக்கு காரில் புறப்பட்டார். காரை ராஜே‌‌ஷ் பை ஓட்டினார். திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையில் நேற்று காலை சுமார் 8 மணியளவில் கார் வந்து கொண்டிருந்தது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே பாண்டியராஜன் பிரிவு என்னுமிடத்தில் கார் வந்தபோது திடீரென்று முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய கார் சாலையின் மையப்பகுதியில் தடுப்புசுவர் மீது ஏறி மறுபுறத்திற்கு சென்றது. கண்இமைக்கும் நேரத்தில் எதிரே மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த ராஜே‌‌ஷ்பை படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காரில் பயணம் செய்த திலீப்குமார், சங்கரகவுடா, குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். கார் மோதிய வேகத்தில் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்புசுவர் மீது ஏறியது. உடனே பஸ்சின் டிரைவர் கொடைரோடு அருகேயுள்ள கட்டக்கூத்தன்பட்டியை சேர்ந்த மாரிமுத்து (47) என்பவர் சாமர்த்தியமாக பிரேக் பிடித்து நிறுத்தியதால் சாலையில் கவிழாமல் நின்றது. பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி அதிர்‌‌ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்த அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்