லேசர் ஒளியில் ஜொலிக்கிறது பேராலயம்: வேளாங்கண்ணியில், கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம் பக்தர்கள் குவிந்தனர்

வேளாங்கண்ணியில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பேராலயம் முழுவதும் வண்ண லேசர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது. விழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

Update: 2019-12-24 22:45 GMT
வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது. இதனால் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்த பேராலயத்திற்கு வந்து செல்கிறார்கள்.

கீழை நாடுகளின் லூர்து நகர் என்ற பெருமையுடன் இந்த பேராலயம் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். பேராலயத்தின் அருகிலேயே வங்க கடல் அமைந்துள்ளது மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.

பக்தர்கள் குவிந்தனர்

பல்வேறு சிறப்புகள் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் ஆண்டுதோறும் ஏசு கிறிஸ்து பிறந்த நாளான டிசம்பர் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய நாள் நள்ளிரவில் ஏசு பிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.

அதேபோல் இந்த ஆண்டும் இயேசு பிறப்பு நிகழ்ச்சி நேற்று நள்ளிரவு வெகு சிறப்பாக நடந்தது. இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து குவிந்துள்ளனர்.

ஜொலிக்கிறது

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வழக்கமாக பேராலயம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். இந்த ஆண்டு முதன் முறையாக வண்ண, வண்ண லேசர் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பேராலயம் முழுவதும் மட்டுமல்லாது விண்மீன் ஆலயத்திற்கு செல்லக்கூடிய பாதை, கீழ் கோயிலுக்கு செல்லக்கூடிய பாதை, தியான மண்டபம் உள்ளிட்ட இடங்களும் லேசர் விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு பேராலயம் ஜொலிக்கிறது.

விழாவையொட்டி வேளாங்கண்ணி விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் பேராயலத்திற்கு வந்து செல்ல வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்