கோவில்களில் அனுமன் ஜெயந்தி சிறப்பு வழிபாடு - பக்தர்கள் குவிந்தனர்
அனுமன் ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர்.;
தேனி,
அனுமன் ஜெயந்தியையொட்டி தேனி மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. தேனி அல்லிநகரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை, பகல் மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
தேனி அல்லிநகரம் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். அதுபோல், தேனி கணேசகந்தபெருமாள் கோவில், பெத்தாட்சி விநாயகர் கோவில் ஆகிய இடங்களிலும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அங்கும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அதுபோல், மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக கோவில்கள் மற்றும் கோவில்களுக்கு செல்லும் வழிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
போடி சீனிவாச பெருமாள் கோவிலில் அனுமனுக்கு பால்,பழம், நெய் பஞ்சாமிர்தம், பன்னீர் உள்பட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. அதன்பின் அனுமனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது பழ மாலைகள், வெற்றிலை மாலைகள், உளுந்த வடை மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் சுரேஷ், கோவில் பட்டாச்சாரியார்களான கார்த்திக், அபிஷேக், முருகன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
போடி வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சங்கரநாராயணருக்கு அனுமன் அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் சேகர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். போடி பரமசிவன் மலைக்கோவிலில், சுப்பிரமணியசுவாமி கோவில், சிலமலை சீனிவாசப் பெருமாள் கோவில்களில் அனுமன் ஜெயந்திையயொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமானுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று துளசிமாலை, வெற்றிலை மாலை அணிவித்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.