கும்பகோணத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு போக்குவரத்து நெருக்கடியால் மக்கள் அவதி

கும்பகோணத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2019-12-29 22:45 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகரத்தில் ஆதிகும்பேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில், சக்கரபாணி கோவில், நாகநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு பிரசித்திப்பெற்ற கோவில்கள் உள்ளன. கும்பகோணம் அருகே தாராசுரத்தில் உலக பாரம்பரிய சின்னமாக திகழும் ஐராவதீஸ்வரர் கோவில் உள்ளது. கும்பகோணம் அருகே திருவிடைமருதூர், திருநாகேஸ்வரம், திருவிசநல்லூர் உள்ளிட்ட இடங்களில் பிரசித்திப்பெற்ற கோவில்கள் ஏராளமாக உள்ளன.

இக்கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் மக்கள் கும்பகோணத்துக்கு ஆன்மிக சுற்றுலா வருகிறார்கள். தற்போது தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் கும்பகோணத்துக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

மக்கள் அவதி

நேற்று கும்பகோணம் பகுதியில் சுற்றுலா வேன்கள், கார்களை அதிகளவில் காண முடிந்தது. இதன் காரணமாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டனர். கும்பகோணம் மடத்துத்தெரு, தஞ்சை மெயின்ரோடு, பெரியதெரு, பஸ் நிலையம், காமராஜர் ரோடு ஆகிய பகுதிகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது.

பழைய பாலக்கரை பகுதியில் கார்களும், சுற்றுலா பஸ்களும் வரிசையாக அணிவகுத்து நின்றன. விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்