திருப்பூர் மாவட்டத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவல்? - போலீஸ் சோதனையில் 4 பேர் சிக்கியதால் பரபரப்பு

திருப்பூர் மாவட்டத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் வாகன சோதனை நடத்தி 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-12-29 22:30 GMT
திருப்பூர், 

கோவை, திருப்பூர் பகுதியில் காரில் பயங்கரவாதிகள் 4 பேர் ஊடுருவியதாக மத்திய உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த 3 நாட்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளின் புகைப்படத்தை வைத்து சோதனை சாவடிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இரவு நேரங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் ரெயில் நிலையம், பஸ் நிலையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் கர்நாடக மாநிலம் பதிவு எண் கொண்ட காரில் 4 பேர் திருப்பூர் மாவட்டத்துக்குள் நுழைந்துள்ளதாகவும், அவர்கள் பயங்கரவாதியாக இருக்கலாம் என்றும் திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் உள்ள சோதனை சாவடிகள் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன தணிக்கை நடந்தது.

திருப்பூரை அடுத்த அவினாசி அருகே சேவூர் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கர்நாடக பதிவு எண் கொண்ட ஒரு கார் வந்தது. காரை நிறுத்தி உள்ளே இருந்த 4 பேரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகத்தில் பேரில் அவர்களை பிடித்து வைத்தனர்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று 4 பேரிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர்கள் 4 பேரும் சோமனூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வந்ததும், அவர்கள் போலீசாரால் தேடப்பட்டவர்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இருப்பினும் நேற்று இரவு திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பை தொடர்ந்தனர்.

மேலும் செய்திகள்