மலிவு விளம்பரத்துக்காக மோதுகிறார்கள்: கவர்னர், முதல்-அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

மலிவு விளம்பரத்துக்காக மோதலில் ஈடுபடும் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார். புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2019-12-30 23:00 GMT
புதுச்சேரி,

புதுவையில் கவர்னர், முதல்-அமைச்சர் இடையேயான மலிவு விளம்பர மோதல்போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. புதுவை மாநிலத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தும் வகையிலேயே அவர்களது நடவடிக்கைகள் உள்ளன. ஆனால் மத்திய அரசு இதன் மீது நடவடிக்கை எடு்க்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இனியும் வேடிக்கை பார்க்காமல் இருவர் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதுவை காங்கிரஸ் அரசு கடந்த 46 மாதத்தில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தனது அரசின் இயலாமையை மறைக்க தான் முதல்-அமைச்சர் என்பதையும் மறந்து வாய்க்கு வந்தபடி கவர்னரை வசைபாடி வருகிறார். மக்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ளும் பணிகளை தொடர்ந்து செய்கிறார்.

அவர் கவர்னரை பேய் என்றும் கூறிவிட்டார். இப்போது அரசுத்துறை இயக்குனர் கணேசன் மரணத்துக்கு கவர்னர்தான் காரணம் என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக கூறியுள்ளார். இது உண்மையா? என்று போலீஸ் டி.ஜி.பி. விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யவேண்டும்.

இயக்குனர் கணேசன் மரணம் தொடர்பாக யாராவது புகார் செய்துள்ளார்களா? அதை காவல்துறை மூடி மறைக்கிறதா? குற்றச்சாட்டு தொடர்பாக தன்னிடம் என்ன ஆதாரம் உள்ளது? என்பதை முதல்-அமைச்சரும் தெரிவிக்கவேண்டும். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். முதல்-அமைச்சரின் குற்றச்சாட்டு தவறானது என்றால் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ளவர் என்று கூறும் முதல்-அமைச்சர் நாராயணசாமியே இது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடலாம். அதை செய்யாமல் வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. அவர் தனது குற்றச்சாட்டை மக்கள் மத்தியில் நிரூபிக்கவேண்டும்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டத்தின்போது தேசியக்கொடி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணிக்கு மேலும் அதை கைகளில் ஏந்தி சென்றுள்ளனர். இதுதொடர்பாக முதல்-அமைச்சர் நாராயணசாமி பொது மன்னிப்பு கேட்கவேண்டும்.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

மேலும் செய்திகள்