வி.கோட்டா அருகே, மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் மினிலாரி மோதி பலி

வி.கோட்டா அருகே மோட்டார்சைக்கிளில் சென்றவர்கள் மினிலாரி மோதி பலியானார்கள்.;

Update:2020-01-01 03:30 IST
ஸ்ரீகாளஹஸ்தி,

வி.கோட்டா மண்டலம் கொங்காட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் மொய்தீன் (வயது 45), கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் மகபூப்பாஷா (41), டிராக்டர் டிரைவர். நேற்று முன்தினம் இரவு மொய்தீன் சாந்திபுரம் மண்டலம் ராஜுபேட்டையில் உருளைக்கிழங்கு பாரம் ஏற்றுவதற்காகச் சென்றார். மகபூப்பாஷா சொந்த வேலையாக ராஜுபேட்டை சென்றுள்ளார். அங்கிருந்து இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

வி.கோட்டா–குப்பம் நெடுஞ்சாலையில் அண்ணவரம் வளைவு அருகில் மோட்டார்சைக்கிள் வந்து கொண்டிருந்தபோது, வி.கோட்டாவில் இருந்து குப்பத்தை நோக்கி வந்த தமிழக மினி லாரி அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் மொய்தீன், மகபூப்பாஷா ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். மினிலாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வி.கோட்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் யதீந்ரா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். விபத்து நடந்த பகுதி ராமகுப்பம் எல்லைக்குள் வருவதால் ராமகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரின் பிணங்களும் பிரேதப் பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்