புதிய சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்றக்கோரி ஆத்தூரில், வியாபாரிகள் திடீர் சாலைமறியல்

புதிய சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்றக்கோரி, ஆத்தூரில் வியாபாரிகள் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆறுமுகநேரியில் பொதுமக்கள் முகத்தில் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-31 22:30 GMT
ஆறுமுகநேரி,

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இருந்து ஆறுமுகநேரி, அடைக்கலாபுரம் வழியாக திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் வரையிலும் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பழைய சாலையை பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டி, அங்கு ஜல்லி கற்கள், பாறைப்பொடியை பரப்பி, புதிய சாலை அமைக்கப்படுகிறது.

புதிய சாலை அமைக்கும் பணியால் ஆத்தூர், ஆறுமுகநேரி பஜார் பகுதிகளில் காற்றில் தூசுக்கள் அதிகளவில் கலந்து பறப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், வணிகர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதையடுத்து அங்கு தினமும் காலை, மாலையில் சாலையில் தண்ணீர் தெளித்த பின்னர், சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆத்தூரில் சாலைமறியல்

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சாலையில் தண்ணீர் தெளிக்காமல் சாலை அமைக்கும் பணி நடந்ததால், காற்றில் தூசுக்கள் அதிகளவில் கலந்து மூச்சுத்திணறலை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், புதிய சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும், ஆத்தூர் பஜாரில் வியாபாரிகள் நேற்று மதியம் 12.15 மணி அளவில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

உடனே ஆத்தூர் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலை அமைக்கும் பணியை விரைந்து நிறைவேற்றுவதாகவும், தினமும் காலை, மதியம், மாலை என 3 முறையும் சாலையில் தண்ணீர் தெளிக்க ஏற்பாடு செய்வதாகவும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முகத்தில் துணி கட்டி போராட்டம்

இதற்கிடையே ஆறுமுகநேரி பஜாரில் புதிய சாலை அமைக்கும் பணியால் பொதுமக்களுக்கு மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது என்று கூறி, வக்கீல் தொண்டன் சுப்பிரமணி தலைமையில், பொதுமக்கள் முகத்தில் துணி கட்டியவாறு, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் சண்முகம், நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் ஆனந்தவேல், அ.ம.மு.க. மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்