மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-01-01 23:00 GMT
மேட்டூர்,

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்காக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இவ்வாறு திறக்கப்படும் தண்ணீர் பாசன தேவைக்கு ஏற்றவாறு அதிகரித்தோ, குறைத்தோ திறந்து விடப்படுகிறது.

கடந்த மாதம் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் பரவலாக மழை பெய்ததன் காரணமாக பாசனத்துக்கான தண்ணீர் தேவை மிகவும் குறைந்தது. இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கும் குறைவான தண்ணீரே திறந்து விடப்பட்டு வந்தது. இந்தநிலையில் பயிர்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. அதே நேரத்தில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பாசன பகுதிகளில் பெய்த மழையின் அளவு மிகவும் குறைந்தது. இதன் காரணமாக தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்தது.

அதிகரிப்பு

இதனால் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சில நாட்களிலேயே மழை பெய்யத்தொடங்கியது. எனவே டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. தற்போது மழை பெய்வது நின்றதால் பாசனத்துக்கான தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நேற்று காலை முதல் டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியில் இருந்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நேற்று அணை நீர்மட்டம் 118.63 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 1,926 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 10 ஆயிரம் கனஅடி வீதமும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதமும் என மொத்தம் 10 ஆயிரத்து 600 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடிக்கு கீழ் குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டு உள்ளதால் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது.

மேலும் செய்திகள்