குளித்தலை அருகே மர்மபொருள் வெடித்து விவசாயி பலி வீட்டை சுத்தம் செய்தபோது பரிதாபம்

குளித்தலை அருகே மர்மபொருள் வெடித்ததில் விவசாயி பலியானார். வீட்டை சுத்தம் செய்தபோது இந்த பரிதாபம் நிகழ்ந்தது.

Update: 2020-01-04 23:15 GMT
கரூர்,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள நெய்தலூர்காலனி குருணிகாரன் தெருவை சேர்ந்தவர் காத்தான். இவரது மகன் சுதாகர் (வயது 34). விவசாயியான, இவர் நேற்று காலை தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் திடீரென வெடி வெடித்ததுபோல சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதற்றம் அடைந்த சுதாகரின் பெற்றோர் வீட்டிற்கு உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது சுதாகர் உடலில் பல்வேறு இடங்களில் ரத்தக்காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் சுதாகரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் புதுக்கோட்டையில் இருந்து தடயவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு வெடித்து சிதறி கிடந்த மர்மபொருட்களின் பாகங்களை கைப்பற்றி ஆய்வுக்காக எடுத்து சென்றார்.

இது குறித்து சுதாகரின் பெற்றோர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெடித்து சிதறியது எந்த பொருள்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மர்மபொருள் வெடித்ததில் பலியான சுதாகருக்கு திருமணமாகி மனைவியும், 3 வயதுடைய மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்