3.90 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் பாஸ்கரன் தகவல்
மாவட்டத்தில் 3.90 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படஉள்ளதாக அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்தார்.;
சிவகங்கை,
தமிழக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரா்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளது.
இதன் தொடக்கவிழா சிவகங்கையை அடுத்த பாகனேரியில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். பாகனேரி தொடக்க ேவளாண்மை கூட்டுறவு சங்க தலைவரும், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனருமான தேவதாஸ் வரவேற்று பேசினார்.
விழாவில் அமைச்சர் பாஸ்கரன் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 வழங்கி பேசியதாவது:- தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா பதவியில் இருந்த போது ஏழைகளின் முன்னேற்றத்திற்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கினார்.
அதனடிப்படையில் தமிழா்களின் திருநாளான பொங்கல் பண்டிகையை அனைவரும் சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்குடன் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டது.
அதில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரிப்பருப்பு, 5 கிராம் ஏலக்காய், இரண்டு அடி நீள கரும்பு ஆகியவற்றுடன் தலா ரூ.1,000 ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டது. இதை தற்போதைய முதல்-அமைச்சரும் தொடர்ந்து வழங்கி வருகிறார்.
இந்தஆண்டு மாவட்டத்தில் உள்ள 802 கூட்டுறவு ரேஷன்கடைகள், தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழகம் மூலம் 22 ரேஷன்கடைகள், மகளிர் குழு நடத்தும் 5 ரேஷன்கடைகளின் 3 லட்சத்து 89 ஆயிரத்து 735 ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதன்மூலம் ரூ.41.89 கோடி மதிப்பீட்டில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
நமது மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி முதல் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் லதா, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் ஆரோக்கியசுகுமார், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனா் பழனீஸ்வரி, நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளா் உமா மகேஸ்வரி, சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பண்டகச்சாலை தலைவா் நாகராஜன், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சகத் தலைவா் சசிக்குமார், மத்திய கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் என்.எம்.ராஜா, மாவட்ட வழங்கல் அலுவலா் காளிமுத்தன், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவா் தேவதாஸ், கூட்டுறவு சங்க இயக்குனா்கள் மோகன்,சேவியா்மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.