பதவியேற்பு விழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற, ஊராட்சி ஒன்றிய உதவியாளரை தாக்கிய 3 பேர் கைது

பதவியேற்பு விழாவுக்கு அழைப்பிதழ் கொடுக்க சென்ற போது ஊராட்சி ஒன்றிய உதவியாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-06 22:15 GMT
பனைக்குளம்,

மண்டபம் யூனியனில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களுக்கு பதவியேற்புக்கான அழைப்பிதழை யூனியன் ஆணையாளர் சேவுகப்பெருமாள், உதவியாளர் பரமக்குடியை சேர்ந்த நாகேசுவர ராவ் என்பவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளார். அதைதொடர்ந்து அவர் 6-வது வார்டில் வெற்றி பெற்ற நித்யாவுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக யூனியனுக்கு சொந்தமான அரசு வாகனத்தில் சென்றார்.

அப்போது வழுதூர் விலக்கு சாலையில் திடீரென சிலர் அந்த வாகனத்தை வழிமறித்து சேதப்படுத்தியதுடன், அதில் இருந்த நாகேசுவர ராவை தாக்கிவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது.இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் யூனியன் ஆணையாளருக்கு தகவல் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து அங்கு வந்த யூனியன் ஆணையாளர் உடனடியாக அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். பின்பு இதுகுறித்து கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உதவியாளரை தாக்கி தப்பியோடிய ரஞ்சித், மணிகண்டன், பிரபு ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்