பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை - கோவை கோர்ட்டு தீர்ப்பு

கோவையில் பெண்ணிடம் நகை பறித்த வாலிபருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

Update: 2020-01-06 21:45 GMT
கோவை,

கோவை கணபதி அருகே உள்ள வி.ஜி.ராவ் நகரை சேர்ந்தவர் ருக்குமணி (வயது 52). இவர் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் 5-ந் தேதி தனது வீட்டின் முன்பு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த கோவை சுங்கம் பகுதியை சேர்ந்த பாபு (30) என்பவர் ருக்குமணி கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டு சென்றார்.

இது குறித்த புகாரின்பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட பாபுவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு ஞானசம்பந்தம் தீர்ப்பு கூறினார்.

கோவையை சேர்ந்தவர் ராமன் (30). இவர் கடந்த 2014-ம் ஆண்டு சரவணம்பட்டியை அடுத்த காப்பிக்கடை பஸ்நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் ராமன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.இந்த விபத்து குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த பஸ்சை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அலங்கியத்தை சேர்ந்த கோடீஸ்வரன் (33) என்பவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட கோடீஸ்வரனுக்கு ஒரு ஆண்டு சிறையும் ரூ.1000 அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு ஞானசம்பந்தம் தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்